திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் கிராமத்தில் அமைந்துள்ள சிறுகுளம் என்கிற குளத்தில் ஏராளமான பறவைகள் வந்து செல்கின்றன. இங்குள்ள நாட்டு கருவேலம் மரங்களில் கூடுகட்டி வாழும் நீர்வாழ் பறவைககளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் நெல்லை நீர் வளம் திட்டத்தின் கீழ் முன்னீர்பள்ளம் முத்தமிழ் பள்ளி மாணவர்கள், ஏட்ரி நிறுவனத்தினர், நெல்லை நேட்சர் கிளப் மற்றும் சமூக ஆர்வலர்கள் இன்று தூய்மைபடுத்தும் பணியினை மேற்கொண்டனர். இப்பணியினை மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வி. விஷ்ணு இ.ஆ.ப. அவர்கள் துவங்கி வைத்தார்கள். மேலும் இக்குளத்தினை மேம்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து முத்தமிழ் பள்ளியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இக்குளத்தில் வாழும் பறவைகள் குறித்து ஆய்வு செய்தனர். குளத்தின் நீரில் கரைந்துள்ள தாதுக்கள், உப்புகள் மற்றும் அமிலகார தன்மை போன்றவற்றை வெவ்வேறு இடங்களில் எடுத்த நீரின் மாதிரிகள் கொண்டு மாணவர்கள் அந்த இடத்திலேயே ஆய்வு செய்தனர். நீரின் தன்மை குளத்தின் நுழை வாயிலில் இருந்து ஒவ்வொரு மதகாக கடந்து வயலுக்கு செல்கையில் அதில் இருந்த உப்புகளின் அளவும் தாதுக்களின் அளவும் வெகுவாக குறைந்து பறவைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழலை உருவாக்கியுள்ளது என்பதை ஆய்வின் முடிவில் மாணவர்கள் கண்டறிந்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை ஏட்ரி ஒருங்கிணைப்பாளர் திரு. மதிவாணன், நெல்லை நேட்சர் கிளப் செயலாளர் திரு. ஹரிபிரதான், முத்தமிழ் பள்ளியின் தலைவர் திரு. அமரவேல் பாபு மற்றும் தாசில்தார் திரு. செல்வம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்