நமது அறியாமை என்னும் அரக்கனை அழிக்கும் மலைமகளாகவும், நமது வாழ்வில் வளமையை ஏற்படுத்தித் தரும் அலைமகளாகவும் நமது மனதில் ஞானச்சுடரை ஏற்றவல்ல கலைமகளாகவும் ஒன்பது நாட்களும் கொலு இருந்து பத்தாம் நாளாம் விஜயதசமி அன்று அணு அளவு தொடங்கினாலும் மலையளவு பெருகும் என்பதற்கு இணங்க நமது முத்தமிழ் பள்ளியில் வித்யாரம்பம் நடைபெற்றது. விஜயதசமி நன்னாளில் கல்வியை துவங்குவது நமது தமிழர்களின் மரபுகளில் ஒன்று. சென்ற இடமெல்லாம் சிறப்பு தரும் கல்வியை தமது மழலைச் செல்வங்களுக்கு அளித்திட விரும்பிய பெற்றோர்கள் மிகவும் ஆர்வத்துடன் தங்களது குழந்தைகளை முத்தமிழ் பள்ளியில் சேர்த்தனர். நமது பாரம்பரிய முறையான வித்யாபியாஸம் என்ற முறைப்படி நெல்லில் மஞ்சள் வைத்து அகரம் எழுதி பள்ளியின் மூத்த ஆசிரியரான திருமதி கோமதி அவர்களின் வழிகாட்டுதலின் படி மழலைகளின் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் தாத்தா பாட்டி ஆகியோரின் ஆசியுடன் தங்களது கல்வி பயணத்தை இனிதே துவங்கினர் மழலைச்செல்வங்கள். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைவர் திரு. அமரவேல் பாபு, தாளாளர் திருமதி. ஜெயந்தி பாபு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் மேலாளர் ராபின் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி ராஜா ஜீவநேசன் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.